தினமணியின் மணிமகுடத் தலையங்கம்

தீவிரவாதத்தை அடக்கும் முறையை [ அடக்குமுறையல்ல ] சரியாய் புரிந்துகொள்ளவியலாதவர்கள், இத்தலையங்கத்தை ஒருமுறைக்கு இருமுறை படிக்கலாம்.

பள்ளிக்கூடத்தில் வாத்தியாரின் பெஞ்சினில் வைக்கப்படும் ஊசிவழியே துவங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, பால பரிணாமம் பெற்று, பன்முகம் கொண்டு, வளர்ந்து, வன்மம் பெறுகிறது.

மறுக்கப்படும் நீதி, மறைக்கபடும் உண்மை, மறக்கப்படும் நலன், பறிக்கப்படும் உரிமை, இவையெல்லாம் ஒன்று கூடித்தான் "மாற்றம்"பெற்று "வைரஸாக" மாறி ஒரு நாள் அது "ஏதாவது ஒரு பெயரில்" வெளிப்படலாம்,அதற்கு சமூகம் என்ன பெயர் கொடுக்கிறது என்பது பற்றி அவர்கள் கவலைபடுவதில்லை.காட்டில் வாழும் விலங்கினத்தையே தமக்கு ஆதரவாக பழக்கப்படுத்தி, மாற்றும் திறன் கொண்ட மனிதன் ,தம்மை போன்ற மனிதர்களை மிருகமாக்குகிறான் என்பதே உண்மை, தீவிரவாதிகளும் மனிதர்களே,அவர்களையும் "அதிகபட்சம்" திருத்தமுடியும்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது எனும் பழமொழியும், பூனையே ஆனாலும் அடைத்து வைத்து துன்புறுத்தினால் புலியாக மாறும் என்பதும் நமக்குணர்த்தும் பாடங்களாகும்,
தேவை, மாற்றமும், நல்அணுகுமுறையும் தான். [ வலைப்பூ ஆசிரியர் ]
===============================================================================
நன்றி - தினமணி:- தலையங்கம் 07-07-2010

காஷ்மீர் பள்ளத்தாக்கு மீண்டும் பற்றி எரியத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி தொடங்கிய அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் இதுவரை 14 உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது. இதில் வேதனைக்குரிய விஷயம் பலியான அத்தனை பேரும் இளைஞர்கள் என்பது. ஒன்பது வயதுச் சிறுவனிலிருந்து அதிகபட்ச வயது 25 வரையிலான இளைஞர்கள் பாதுகாப்புப் படையினரின் குண்டுகளுக்குப் பலியாகி இருக்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் என்கிற பெயரில் ராணுவத்தினரைத் தாக்க அணி திரண்டபோது, தங்களைத் தற்காத்துக் கொள்ள ராணுவம் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 15 காவல்துறையினர் உள்பட 35 பேருக்குக் காயம் ஏற்பட்டது. 12-வது வகுப்பில் படிக்கும் 17 வயது துஃபேயில் அகமது மாத்தோ என்கிற சிறுவனின் மரணம் எதிர்பாராதது.

கடந்த ஒரு மாதமாகக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்து வரும் ராணுவத்துக்கும் அரசுக்கும் எதிரான போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர் என்பதைவிட, தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதுதான் சரியாக இருக்கும். துப்பாக்கிப் பிரயோகம் நடந்தால் நிச்சயமாகப் பலியாவோம் என்று தெரிந்தும் இளைஞர்கள், கல்லையும், உருட்டுக் கட்டைகளையும் தூக்கிக் கொண்டு கூட்டம் கூட்டமாக ராணுவ முகாம்களைத் தாக்கப் புறப்படுவதை வேறு எப்படித்தான் வர்ணிப்பது?

ஒவ்வொரு மரணத்தையும் தொடர்ந்து சடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, பெரும் கூட்டம் அணி திரள்கிறது. தற்காப்புக்காகக் காவல் துறையினரோ, ராணுவமோ துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியது என்பதை, மரண துக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? ஊர்வலத்தில் ராணுவத்துக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. திடீரென்று ஆத்திரத்தில் ஓர் இளைஞன், பாதையின் இருபுறத்திலும் பாதுகாப்புக்கு நிற்கும் ராணுவத்தை நோக்கிப் பாய்வதும், கூட்டம் வெறிபிடித்தாற்போல அவனுக்குப் பின்னால் ஓடுவதும், மீண்டும் துப்பாக்கிச் சூடு... மரணங்கள்... குண்டடிபட்ட காயங்கள்...

கடந்த 2008-ம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது, மக்கள் ஆவலுடனும், ஆர்வத்துடனும் பெருந்திரளாக வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்ததைப் பார்த்து உலகமே வியந்தது. வன்முறையாளர்களின் அச்சுறுத்தலை சட்டை செய்யாமல் ஆண்களும் பெண்களும் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். அவர்களது நம்பிக்கை ஒன்றரை ஆண்டுகளில் தகர்ந்து விட்டதே, ஏன்?

இத்தனைக்கும் காஷ்மீர முதல்வர் ஒமர் அப்துல்லா கெட்ட பெயர் எதுவும் சம்பாதித்துவிடவில்லை. நல்லவர் என்கிற நன்மதிப்பு இருக்கிறது. ஆட்சி செய்ய நல்லவராக மட்டும் இருந்தால் போதாதே, வல்லவராகவும் இருக்க வேண்டுமே. அதுதான் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்று தோன்றுகிறது. நடைபெற்று வரும் வன்முறை மற்றும் கலவரங்களுக்குப் பாகிஸ்தானின் ஆசிர்வாதத்துடன் இயங்கும் லஷ்கர்தான் காரணம் என்றும், தேசவிரோத சக்தியான ஹுரியத் போன்ற அமைப்புகள்தான் காரணம் என்றும் பழிசுமத்துவதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

வெற்றிகரமாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் பயனாய் ஓர் இளைய தலைமுறை அரசியல் வாரிசின் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, ஜனநாயக உணர்வைப் பலப்படுத்தி இருக்க வேண்டும். காலம் கடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவிலேயே உள்ளாட்சி அமைப்பு என்கிற ஒன்று செயல்படாமல் இருக்கும் ஒரே மாநிலம் ஜம்மு காஷ்மீரம் மட்டுமே!

சட்டப்பேரவைத் தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 45 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முதல்வர் ஒமர் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 17 இடங்களைத்தான் வென்றது. ஒருவேளை, உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால், பெருவாரியான உள்ளாட்சி அமைப்புகளை பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுவிடுமோ என்கிற அச்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைத் தள்ளிப்போட்டதுதான் முதல்வர் அப்துல்லா செய்த மிகப்பெரிய தவறு.

வன்முறையால் பாதிக்கப்பட்டு, வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்துவிட்ட நிலையில், முறையான ஜனநாயகம் மூலம் மட்டுமே அடிப்படை வசதிகளுடன் நிம்மதியாக வாழ முடியும் என்கிற நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருந்தனர் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள். அச்சுறுத்தலை மீறித் தேர்தலில் அவர்கள் வாக்களித்ததற்குக் காரணமே, தங்களுக்கு முறையான நிர்வாகம் வேண்டும், அதன் மூலம் வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதால்தான். இதைப் புரிந்துகொண்டு செயல்படாதது யாருடைய தவறு?

தேர்ந்தெடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் சரி, தங்களது தொகுதிக்கு ஒருமுறைகூடத் திரும்பிச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. முதல்வர் அப்துல்லாவோ, தானே மக்களின் குறைகளைக் கேட்டுத் தீர்க்க விரும்புகிறாரே தவிர, முறையான அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டால், எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்று, மக்களின் செல்வாக்கைப் பெற்று விடுவார்கள் என்று பயப்படுகிறார். இந்த நிலையில் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பது யார்? அதற்கு ஜனநாயகம் இடம் கொடுக்காவிட்டால், வன்முறையில் ஈடுபடுவதை எப்படிக் குற்றம் கூற இயலும்?

துப்பாக்கி ரவைகள் பாயும், சாகப் போகிறோம் என்று தெரிந்தும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்தை எதிர்க்கத் தெருக்களில் இறங்கத் தயங்காத நிலையில், ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இளைஞர்களின் கோபத்தைத் தணிக்கத் துணிவுடன் களமிறங்க ஏன் தயங்குகிறார்கள்? இது உயிர்ப் பாசமா, பதவிப் பாசமா?

மக்களின் உணர்வுகளை ஓர் அரசு புரிந்து கொள்ள முடியாவிட்டால், துப்பாக்கி ரவைகளால் அவர்களது ஆத்திரத்தை அடக்கிவிட முயற்சிப்பதும் இயலாத ஒன்று. காஷ்மீர் பள்ளத்தாக்கின் உடனடித் தேவை பாதுகாப்பு நடவடிக்கையும், அடக்குமுறையும் அல்ல. அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளியை அகற்றுவதற்கான முயற்சிகள்!
நன்றி - தினமணி:- தலையங்கம் 07-07-2010

0 comments:

நட்புக்கு இலக்கணம்

என்னை பற்றி

My Photo
DUBAI, DUBAI, United Arab Emirates
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.பிறரிடம் கற்கவேண்டியதோ ஏராளம்.நடமாடும் அறிவுக்களஞ்சியமாய் என் முன் நடமாடும் அத்துனை மனிதர்களையும் மதிக்கிறேன்,அவர்களினின்றும் பாடம் கற்கிறேன்.இதோ கீழிருக்கும் மீன்கள் உணவு தேடி அலைகிறது என்பதும் ,இல்லை, விஷயம் தேடி அலைகிறது என்பதும், அவரவர் அறிவு சார்ந்த விஷயத்திற்கே விட்டு விடுகின்றேன்.

Fish

My Blog List

5